கதை கதையாம் காரணமாம் - பாகம் 14

கிருஷ்ணர் : என்ன கதை….?

மேகலா : ஒரு முறை…, பிரம்மாவுக்கு, தன் படைப்புத் தொழில் மீது, மிகுந்த கர்வம் ஏற்பட்டது. அதனால் எதிரில் வருவது யார் என்பது கூட தெரியாமல், அலட்சியமாக நடந்து கொண்டார். அந்த வழியே, முருகப் பெருமான் வந்தார். பிரம்மாவும், முருகனைக் கண்டு கொள்ளாமல் சென்றார். படைப்புத் தொழிலைச் செய்யும், படைப்புக் கடவுள் பிரம்மா, இப்படி அலட்சியமாகச் செல்கிறாரே என்று கோபமடைந்த முருகன் அவரைத் தடுத்து நிறுத்தினார். பிரம்மாவும், ஒன்றும் புரியாமல், என்ன என்பது மாதிரி ஏறெடுத்துப் பார்த்தார். முருகனும், ‘எதிரில் வருவது யார் என்று கூட கவனிக்காமல் இத்தனை வேகமாக எங்கு செல்கிறீர்கள்? உலகத்தின் மீது உங்கள் பார்வை கொஞ்சம் கூட இல்லாமல், படைப்புத் தொழிலை எப்படிச் செய்வீர்கள்…? மனிதர்களுக்கு, வேதத்தையும், ஞானத்தையும் அறிந்து கொள்ளும் அறிவை எப்படிக் கொடுப்பீர்கள்…? சரி, அதுதான் போகட்டும்…. முதலில், ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின் அர்த்தம் தெரியுமா உங்களுக்கு? தெரிந்தால், அதை விளக்கிச் சொல்லுங்கள் பார்ப்போம்’ என்று கேட்டார்…. பிரம்மாவோ, ஒரு சிறுவன் நம்மை கேள்வி மேல் கேள்வி கேட்கிறானே என்ற கோபத்தில், சற்று திகைத்து நின்றார். Rapid time question மாதிரி, கேள்விக்கு உடனே பதில் வராத காரணத்தால், முருகன், பிரம்மா தலையில், கண்டிப்பான கணக்கு வாத்தியார் மாதிரி, ஒரு குட்டு வைத்து, சிறையிலடைத்தார்… ‘என்றைக்கு நீங்கள் பதில் சொல்கிறீர்களோ…, அன்று பார்த்துக் கொள்ளலாம்’ – என்று பதில் சொல்லி விட்டு, படைப்புத் தொழிலை தானே செய்ய ஆரம்பித்தார்…. முருகன் ஒரு straight forward கடவுள். அவரின் படைப்புத் தொழிலில், ஒரு நெகிழ்வு, குழைவு என்பது இல்லாமல், சுத்த செயலாக இருக்கும் என்பதாலும், அவரவர் வேலையை அவரவர்தான் செய்யணும் என்ற காரணத்தாலும், பரமசிவனார், முருகனை அழைத்து, பிரம்மாவை விடுவிக்கச் சொன்னார். முருகன், ‘படைக்கும் கடவுளுக்கு, ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின் அர்த்தம் தெரியவில்லை. அவரை எப்படி விடுவிப்பது’ என்று கேட்டார். பரமசிவனாரும்,’அவரவர் வேலையை, அவரவர்தான் செய்ய வேண்டும்… இது, இயற்கையை அனுசரித்து ஏற்படுத்தப்பட்ட ஒரு செயல். இதை மீறும் பொழுது, இயற்கையின் தன்மை கூட மாறிப் போகும். இந்த நிலை தொடர வேண்டாம்… சரி…, இவ்வளவு கடுமையாக எதிர்க்கிறாயே…, உனக்கு ‘ஓம்’ என்ற மந்திரத்தின் அர்த்தம் தெரியுமா’ என்று கேட்டார். முருகனும், ‘விளக்கம் கேட்க நீங்கள் தயாரானால், என் முன்னே மண்டியிட்டு, குரு வணக்கம் செலுத்தி, சிஷ்யனாக அமருங்கள்…, விளக்கம் கூறுகிறேன்’ என்று கூறினார். பரமசிவனாரும், சிரித்துக் கொண்டு, சிஷ்ய பாவனையில் அமர, ஞானத்தின் வடிவமான சுவாமிநாதனும், பரமசிவனாருக்கு, வேதத்தின் பொருளை விளக்க ஆரம்பித்தார்….

கிருஷ்ணர் : ம்…, வேதத்தின் பொருளை விளக்கிச் சொன்னதைச் சொல்லு….

மேகலா : கிருஷ்ணா…., ‘கந்தன் கருணை’ படத்தில், சிவபெருமான் சிஷ்ய பாவனையில், தெண்டனிட்டு அமர்வார். முருகன், வேதத்தின் பொருளை உபதேசம் செய்வார். அத்தோடு காட்சி மாறி விடும் கிருஷ்ணா… அந்த விளக்கத்தை நீயே சொல்லேன்…

கிருஷ்ணர் : போச்சுடா… உனக்கும் கதை விட மட்டும் தான் தெரியுமா… ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின் அர்த்தம் தெரியாதா… முருகனைக் கூப்பிடவா…, சிறையிலடைப்போம்….

மேகலா : என்ன கிருஷ்ணா…., நானெல்லாம் ஒரு ஆளா… என்னை நீ கலாய்க்கலாமா…

கிருஷ்ணர் :சரி…, கேள்வியைக் கேள்….

மேகலா : பிரம்மா, முருகக் கடவுளை, சின்னப்பிள்ளை என்று அலட்சியமாக கடந்து சென்றதாக கதை சொல்லப்பட்டிருக்கிறது… அதற்குப் போய், பிரம்மாவை சிறையிலடைக்கலாமா கிருஷ்ணா…

கிருஷ்ணர் : இது, ஒரு தத்துவத்தை விளக்குவதற்காக நடத்தப்பட்ட சம்பவமாக நான் பார்க்கிறேன். உலகத்தையே படைக்கும் கடவுளாக இருந்தாலும், கர்வமும் கூடாது…, அலட்சியமும் கூடாது… இது ஒண்ணு… இன்னும் ஒன்று… அறிவும், செயலும் கொண்ட மனிதனை, படைக்கும் கடவுள் எப்பொழுதும், எல்லா விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும்… அது ரொம்ப முக்கியம்… ஒரு கணக்கு வாத்தியார், syllabus-ல் இல்லாத கணக்கைக் கூட, எந்த நேரத்திலும் விளக்கிச் சொல்லும் மனநிலையில் இருக்க வேண்டும்…. கணக்கு மட்டுமல்ல, எந்த விஷயத்தையும், யார் வந்து விளக்கக் கேட்டாலும், விளக்கிச் சொல்லுவதுதான் சிறந்த ஞானிக்கு அழகு… வேற கவனத்தில், சொல்ல மறந்தாலோ…, அல்லது மறுத்தாலோ, அவர்களுடைய திறமைக்கு…, அல்லது பதவிக்கு இழுக்குதான். இதை விளக்கத்தான், முருகன், பிரம்மாவை சிறையடைத்ததாக நான் பார்க்கிறேன். உதாரணத்திற்கு ஒரு விஷயம் சொல்கிறேன். ஒரு நாட்டின் பிரதம மந்திரி, நாட்டின் வளர்ச்சிக்காக ஒரு திட்டத்தை நிறைவேற்றுகிறார். அப்பொழுது, அந்த திட்டத்தை, எதற்கு, ஏன், என்ன என்று எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்கின்றனர். பிரதம மந்திரி, அலட்சியமாக…, அல்லது பதில் சொல்லாமல் கடந்து செல்லலாமா… அது எவ்வளவு தவறு… சட்டத்திற்கும் புறம்பானது… அதைத்தான், முருகன், பிரம்மாவை சிறையிலடைத்து சுட்டிக் காட்டுகிறார். இது உலகத்திற்கு முருகன் விளக்கும் தத்துவம்…

மேகலா : ஓ…, சூப்பர் கிருஷ்ணா… ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின் அர்த்தத்தை விளக்கிச் சொல்லுங்கள் குருவே….

கிருஷ்ணர் : நான் பிரணவ மந்திரத்தின் அர்த்தத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டுமானால்…, நீ தெண்டனிட்டு, சிஷ்யையாக அமர்ந்து கேட்க வேண்டும்…

மேகலா : கிருஷ்ணா…., உன்னை என் குருவாக என்றோ ஏற்றுக் கொண்டேன். நேரம் போகாமல், பேச்சுத் துணைக்கு உன்னிடம் பேசுகிறேன் என்று நினைத்தாயா கிருஷ்ணா… நீ என் குரு…, என் கடவுள்… என்றும் உன்னைப் பணியும் மாணவி நான் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : இதை நான் விளையாட்டுக்காகச் சொல்லவில்லை… நாம் கீதையில் கூட, சொல்லியிருக்கிறோம்… ‘மேலான இந்த கீதையை, பணிந்தும், பணிவிடை செய்து கேட்பாயாக’ என்று… நீ கேட்கும் மேலான விஷயங்களை, ஒருவர் விளக்க முற்படும் போது, அந்த விஷயம் உனக்குத் தெரிந்ததுதான் என்றாலும், நீ மாணவனாக பணிந்து கேட்பதுதான் முறை. அப்பதான், ஆச்சாரியர் சொல்வது, இன்னும் தெளிவாகப் புரியும்… சிவபெருமானின் ‘சிஷ்ய பாவனை’, அதைத்தான் விளக்குகிறது…. சரி…, ‘ஓம்’ என்ற மந்திரத்தின் அர்தத்தைப் பார்க்கலாம்…

(தொடரும்)

Comments

Popular posts from this blog

பக்குவம் - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

கதை கதையாம் காரணமாம் - பாகம் 12

பக்குவம் - பாகம் 8