கதை கதையாம் காரணமாம் - பாகம் 16

கிருஷ்ணர் : சரி..., அடுத்த கதையைப் பார்க்கலாம். கதையென்ன யோசித்திருக்கிறாய்...

மேகலா : ‘தர்மவியாதர்’ கதை கிருஷ்ணா...

கிருஷ்ணர் : Oh! Super...

மேகலா : கௌசிகன் என்ற உத்தம பிராமணன் ஒருவன் இருந்தான். அவன் வேதங்களைக் கரைத்துக் குடித்தவன். நாள்தோறும் வேதங்களை ஓதுவதில் தவறவே மாட்டான். அன்று ஒரு நாள் வேதம் ஓதிக் கொண்டிருந்த போது, மேலே பறந்த கொக்கு ஒன்று எச்சமிட்டது. எச்சம் மேலே பட்டதும், கோபம் கொண்டு கொக்கைப் பார்க்க, அது கோபத்தின் கனல் தாங்க முடியாமல் எரிந்து கீழே விழுந்தது. அதைக் கண்டதும், அவசரப்பட்டு கோபப்பட்டு விட்டோம் என்று வருந்தினான். அன்றைய தின உணவுக்காக, கௌசிகன் பிச்சை வேண்டி, ஒரு பதிவிரதையின் வீட்டின் முன்பு பிச்சை கேட்டு நின்றான். அந்த வீட்டின் தலைவன் அப்பொழுதான் வேலை முடித்து வீட்டிற்கு வந்திருந்தார். அதனால் அந்தப் பெண்மணி,’பிராமணரே, சற்று பொறுங்கள். என் கணவருக்கு பணிவிடை செய்து விட்டு இதோ வருகிறேன்’ என்று சொன்னாள்.... அந்தப் பெண்மணி, கணவனுக்கு பணிவிடை செய்வதுதான் சிறந்த தர்மமாகும்... இதுவே, தெய்வத்திற்கு வழிபாடு செய்வதைக் காட்டிலும் உத்தமமான காரியம் என்ற உறுதி உடையவள்... தன்னுடைய மாமியார், மாமனாருக்கு செய்யும் பணிவிடைகளை மிகுந்த பணிவுடன் செய்யும் இயல்புடையவள்; வேலைக்காரர்களிடம், இன்முகம் மாறாது, அவர்கள் மனம் கோணாமல் நடந்து கொள்பவள்... அவள் செய்து கொண்டிருந்த பணிவிடைகள் முடிந்ததும், கௌசிகரை நோக்கி வந்து, ‘தாமதத்திற்கு மன்னியுங்கள் பிராமணரே..., வீட்டில் உள்ளவர்களுக்கு வேண்டியதைச் செய்து கொடுத்து விட்டு வருவதற்கு தாமதம் ஆகி விட்டது...’ என்று மன்னிப்பு கேட்டாள். அதற்கு கௌசிகர், ‘பிராமணர்களை காக்க வைப்பது பெரும் பாவம்’ - என்று சொல்லி, அவளைக் கோபத்துடன் பார்த்தார்.... அதற்கு, அந்தப் பதிவிரதை, ‘என்ன பிராமணரே, நீர் பார்த்ததும் எரிந்து போவதற்கு, நான் கொக்கு இல்லை..., கொக்கென்று நினைத்தாயா கொங்கணவா’ - என்று சொல்லி, உங்கள் கோபம் பதிவிரதைகளை ஒன்றும் செய்யாது... நீங்கள் கோபத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும்... சிறந்த பிராமணர்கள், கோபத்தையும், ஆசையையும் விடுவதுதான் சிறந்த தர்மம் என்று அறிவார்கள்... நீங்கள், தர்மத்தைப் பற்றி முழுதாக அறிய வேண்டுமென்றால், ‘மிதிலாபுரி’யில் வாழும் ‘தர்மவியாதரை’ சென்று பாருங்கள்... அவர், உங்களுக்கு தர்மத்திற்கான விளக்கத்தை சொல்லுவார் என்று கூறினாள்.... கௌசிகர், தான் கோபத்துடன் பார்த்தவுடன் கொக்கு எரிந்து போனதை இந்தப் பெண்மணி எப்படி அறிந்து கொண்டார் என்பதை நினைத்து நினைத்து ஆச்சரியப்பட்டார்.

அதனால், உடனே மிதிலாபுரிக்குச் சென்றார். அங்கு வசிப்பவர்களிடம், தர்மவியாதரைப் பற்றி விசாரித்தார். அவர்கள், கசாப்புக்கடையில் இருக்கும் தர்மவியாதரைக் கை காட்டவும்..., ஒரு தவமுனிவரை எதிர்பார்த்த கௌசிகருக்கு, ஒரு கசாப்புக்கடைக்காரர்தான் தான் பார்க்க விரும்பிய தர்மவியாதர் என்பதை அறிந்ததும், அதிர்ந்து போனார். கௌசிகருடைய முகக்குறிப்பைப் பார்த்த தர்மவியாதர், ‘வாருங்கள் பிராமணோத்தமரே..., உங்கள் பார்வையால் கொக்கை எரித்த செயலை சுட்டிக் காட்டிய பதிவிரதை, இங்கு என்னை, தர்மத்தின் சூட்சுமத்தை விளக்கச் சொல்லி அனுப்பினாரா’ என்று கேட்டார்... அவ்வளவுதான்..., பதிவிரதை சொன்னதையே இன்னும் நம்ப முடியவில்லை... எங்கேயோ நடந்ததை, இங்கு இருந்தபடியே, எப்படி தர்மவியாதர் அறிந்து கொண்டார்..., என்று ஆச்சர்யம் தாங்காமல் வினவினார். தர்மவியாதர், கௌசிகனை வரவேற்று அமரச் செய்தார். ‘நான் என் தந்தைக்கு பணிவுடன் பணிவிடை செய்கிறேன். என் வாழ்க்கையில் தர்மம் தவறாமல் நடந்து கொள்கிறேன். யாரையும் துன்புறுத்துவதில்லை. பொய் சொல்வதில்லை... என்னுடைய இந்த வாழ்க்கை முறைதான், உங்களை இங்கே வரவழைத்திருக்கிறது’ என்றார். அதற்கு கௌசிகன், ‘இருந்தாலும், நீங்கள் இந்த தொழிலை செய்வீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை’ என்றதும், தர்மவியாதர், ‘இது என் பூர்வஜென்ம பலன் என்று ஏற்றுக் கொள்கிறேன்... இந்த உலகில், ஒரு உயிரைக் கொன்று உணவாக இன்னொரு உயிர் புசிக்கிறது. நாம் நடந்து செல்லும் போது, எத்தனையோ உயிர் நம் கால்தடம் பட்டு மடிகிறது. இது பாவமாக ஏற்றுக் கொள்ளப்படாது... சரி..., உங்களுக்கு நான் அறிந்த தர்மத்தின் தன்மையை எடுத்துச் சொல்கிறேன்...

வாழ்க்கையில், எந்தத் தருணத்திலும், பொய் சொல்லக் கூடாது... இருந்தாலும், ஒரு பொய் சொல்வதனால், பல உயிர்கள் காப்பற்றப்படும் என்றால், அந்தப் பொய் பாவமாகாது. அதுவே தர்மமாகும். ஒரு சின்ன பொய்யினால், அடுத்தவர் துன்பப்படும் போது, அந்தப் பொய்யைச் சொன்னவர் மனம் வருந்தினால், அந்தப் பொய்க்கும் பாவம் சேராது. ஆனால், ‘நான் தெரிந்தேதான் பொய் சொன்னேன்’ என்று ஒருவர் அகம்பாவமாகப் பேசினால்..., அந்தப் பாவத்திற்கு மன்னிப்பே கிடையாது..., என்று தர்மத்தின் சூட்சுமத்தை விளக்கினார்.....

(தொடரும்)

Comments

Popular posts from this blog

பக்குவம் - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

கதை கதையாம் காரணமாம் - பாகம் 12

பக்குவம் - பாகம் 8