திருக்குறளில் வாழ்வியல் - பாகம் 2
கிருஷ்ணர் : இப்படிப்பட்ட அறிவில் பெரியோர்களின் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்… அவரைக் கைப்பிடிக்கும் துணை நலம், எப்படிப்பட்டவளாக இருக்க வேண்டும் என்று வள்ளுவர் ஏதாவது சொல்லியிருக்கிறாரா….
மேகலா : சொல்லாமல் இருப்பாரா கிருஷ்ணா…
‘தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகை சான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்”
ஒரு பெண் கற்புடையவளாக, தன்னையும் காத்துக் கொண்டு, தன் கணவனின் புகழையும், அவன் உயர்வையும் காத்து, சோர்வடையாமல், தன் குடும்பத்தைத் தாங்குவதற்கும், காப்பதற்கும் எப்பொழுதும் தயாராகவே இருப்பாள்... அப்படிப்பட்டவள் வாழ்க்கையில் இல்லத்தரசியாக அமைந்தால், அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்… நீயே யோசித்துப்பார் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : ‘வாவ்’… ஆமாம்… நல்ல மனைவி, கற்பினில் நெருப்பாக ஜொலிப்பாள். தன் கணவனுக்கு, எல்லா சோதனைகளிலும், சாதனைகளிலும் கூடவே, தைரியமாக இருப்பாள். ஒரு கணவன் புகழ் பெறுவதில் கூட, மனைவியின் பொறுமை, இல்லத்தைக் கட்டிக் காத்தல், குழந்தைகளை வளர்த்தல் என்ற பல பரிமாணங்களில் புகழ் சேர்ப்பாள்… அப்படி யாரையாவது உனக்குத் தெரியுமா….
மேகலா : கிருஷ்ணா…., ஒரு முறை, பாடகர் S. P. பாலசுப்ரமணியத்திற்கு விருது கிடைக்கும் போது…, அவர் சொன்னதுதான் எனக்கு ஞாபகம் வருகிறது… ‘எனக்கு இத்தனை பேரும் புகழும் கிடைக்க ரசிகர்கள் ஒரு காரணம் என்றாலும்…, என் மனைவி ஒரு முக்கிய காரணம்…. நான் recording முடிந்து ரொம்ப லேட்டாக வீட்டுக்குச் சென்றால், நான் காதலித்து மணந்த மனைவி, பொறுமையாய், முகம் கோணாமல், எனக்கு சாப்பாடு போட்டு, தேவைகளைக் கவனிப்பார்…. பல சமயங்களில் லீவே எடுக்க முடியாமல் தொடர்ந்து recording போக வேண்டியிருக்கும்… பல நாட்கள், அவர் கூட பேசவே முடியாதபடி, நேரமே கிடைக்காது… Recording இல்லையென்றால், கச்சேரிக்கு அழைப்பு வரும்… அப்பவும் எந்த எதிர்ப்பும் என்னிடம் காட்டாமல், பொறுமையாய் என்னுடன் குடும்பம் நடத்துகிறார்…. என் பிள்ளைகள் என்ன படிக்கிறார்கள் என்று கூட எனக்குத் தெரியாது… இப்படி ஒரு மனைவி அமைந்ததும், கடவுளின் கருணைதான்…’ என்று சிலாகித்துக் கூறியிருக்கிறார் கிருஷ்ணா…
கிருஷ்ணர் : வாழ்க்கையில் திறமையால் சாதிப்பவர்களுக்கு, வாழ்க்கைத்துணை நல்லபடியாக அமையும்… அமைய வேண்டும் என்ற வள்ளுவரின் கருத்து… டபுள் O. K….
மேகலா : அடுத்த கேள்வி கிருஷ்ணா….
கிருஷ்ணர் : செயற்கரிய செயலைச் செய்யும் நல்லவரும், சிறந்த வாழ்க்கைத் துணையும், எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழணும்…? இதற்கு கட்டாயம் வள்ளுவர் ஏதாவது சொல்லியிருப்பாரே…
மேகலா : ஆமாம் கிருஷ்ணா…. ஒரு இல்லறம் எப்படி நடக்கணும் என்று வள்ளுவர், அழகான குறளில், அழகாக விவரிக்கிறார் கிருஷ்ணா….
‘அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது’
கிருஷ்ணர் : ஆகா… இந்தக் குறளுக்கு விளக்கமே தேவையில்லை…. உள்ளங்கை நெல்லிக்கனி போல, தெளிவாய், அழகாய் புரியுது மேகலா… ஒரு கணவனும், மனைவியும், ஒருவருக்கொருவர் அன்போடும், காதலோடும், அனுசரணையோடும் தர்மம் தவறாமல் வாழ்ந்தால், அது பண்பான அழகான இல்லறமாகும்…. நல்ல குடும்பத்தின் சிறப்பு, அதனால் விளையும் நல்ல பலன்கள்…, இவை யாவும், இல்லறத்தின் சிறப்பம்சமாகும்… என்ன அழகாக இரண்டு அடிகளில், திருமணம் செய்பவர்கள் எப்படி வாழ வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் பார்… இதற்கு மேலே ஒன்ணும் சொல்வதற்கில்லை…. வாழ்வியல் கட்டுரைக்கு சிறந்த open குறள்….
மேகலா : நான் சொல்ல வேண்டியத நீயே சொல்லிட்ட கிருஷ்ணா…
கிருஷ்ணர் : குறளின் அழகு அப்படிப்பட்டது மேகலா… சரி…, அடுத்த கேள்வியைக் கேட்கிறேன்… ‘அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை…’ என்று வள்ளுவர் சொல்றாரில்ல… அன்பு எப்படிப்பட்டதாக இருக்கணும்… அறம் என்பது என்ன…? இதில் வள்ளுவரின் பார்வை எப்படி இருக்கு…? சுருக்கமா…, நச்சுனு, குறள் மாதிரி சொல்லு கேட்போம்…
மேகலா :
‘அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு’
எப்படி…, கிருஷ்ணா….
கிருஷ்ணர் : வாவ்…!
மேகலா : எதை எடுத்தாலும், தனக்கு தனக்குனு சண்டை போட்டு பிடுங்குபவங்களுக்கு, எப்படி அடுத்தவங்க மீது அக்கறை இருக்கும்… பெருசா, உறவு, சொந்தம் என்ற அன்பு கிடையாது… சுயநலவாதிகள்… ஊருக்கு உழைப்பவர்களுக்கு, இருப்பவர் இல்லாதவர், ஏழை பணக்காரன் என்று எல்லோர் மீதும் கரிசனமும், அவர்கள் நல்லா இருக்கணும் என்ற அக்கறையும் இருக்கும். எந்த நேரத்திலும், தன்னை நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வதில் தயக்கமே காட்ட மாட்டார்கள். தன்னிடம் இருக்கும் எந்தப் பொருளையும் தயங்காமல் கொடுப்பதில், முகம் கோணுவதில்லை. பொருளில்லாத போது, தன் உழைப்பைக் கொடுத்து உதவுவதிலும் பின்வாங்க மாட்டார்கள்….
(தொடரும்)
Comments
Post a Comment