ஆளுமை - பாகம் 10

கிருஷ்ணர் : நம்மைக் கவர்ந்த ஆளுமையாளர்களின் உணர்வுகள் எதுவோ, அது நம்மையும் தொற்றி விடும் என்பது உண்மையிலும் உண்மை…

மேகலா : கிருஷ்ணா…, என்னோடு பேசும் போது, என்னோட feeling உனக்கும் தெரிந்து விட்டதா கிருஷ்ணா… மனுஷங்களான நாங்க அப்படித்தான் கிருஷ்ணா… சில விஷயங்களில் எனக்குன்னு தனி கோபமோ, ஆச்சரியமோ…, அதிசயமோ இல்லாத போது கூட, நாம் ரசிக்கும் ஆளுமையாளர்களின் கோபமும், பேச்சுக்களும், அனுசரணையும், நமக்கும் கோபத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி விடும்… இந்த உணர்வுகளால்தான், எங்களுக்கு தேச உணர்வும் கூட வருகிறது கிருஷ்ணா… அதுவும் குறிப்பாக அரசியல் நிகழ்வுகளில், விளையாட்டுப் போட்டிகளில் தான் ஆளுமையாளர்களின் தாக்கம் நம்மையும் அதே உணர்வுகளில் பாடாய்ப் படுத்தும்..

கிருஷ்ணர் : ஆமாம்…, ஆமாம்… கிரிக்கெட்டில், ’man of the match’ யாரோ…, அவர்கள்தான் அன்றைய hero-வாகவும் ஆகிறார்கள். அடுத்து ஆடும் போது, நேற்றைய sixer-ஐயும், boundary-யையும் எதிர்பார்த்து, மக்களுடைய ஆரவாரமும், விசிலும் எகிறும்… தன்னை follow பண்ணுபவர்களின் எதிர்பார்ப்பு, ஆளுமையாளர்களிடையே பொறுப்புக்களை அதிகமாக்குகிறது…, இல்லையா… தன்னுடைய நேர்மை திறத்தாலும், உழைப்பாலும், நியாய உணர்வாலும், பிறரின் மனம் கவர்ந்த ஆளுமையாளர்கள், எதிர்பார்ப்புக்காக வேலை பார்ப்பதில்லை மேகலா… இவர்கள் கடவுளிடம் வரம் வாங்கி வந்தவர்கள் மாதிரி, இயல்பாகவே தங்கள் பொறுப்பு உணர்ந்து, கடமையைச் செய்யும் நிஜ ஹீரோக்கள்…

மேகலா : உன்ன மாதிரி…, அப்படித்தானே கிருஷ்ணா….

கிருஷ்ணர் : சரி… என்னை யாராவது அவமதித்துப் பேசினால், நீ என்ன செய்வாய்….

மேகலா : கிருஷ்ணா…, என்ன கேள்வி கேட்கிற கிருஷ்ணா…. என் தேகமெல்லாம் நடுங்குது…

கிருஷ்ணர் : காரணம் இருக்கு…, சொல்லு…. நான் கிருஷ்ணன் என்பதை மறந்து…, உன்னோட ’நண்பன்’, ‘உனக்கு மிகவும் பிடித்தமானவன்’ என்ற நிலையில், நீ என்ன செய்வாய்….

மேகலா : கிருஷ்ணா…, குடலை உருவிடுவேன்… அது முடியாத பட்சத்தில்…, கன்னாபின்னான்னு எகிறிருவேன்…

கிருஷ்னர் : அதுவே உன் அப்பாவைப் பேசினால்….

மேகலா : கிருஷ்ணா…, நீ ஏதோ சொல்ல வர்ரேன்னு நினைக்கிறேன்… அதைத்தான் வெளிப்படையாய் சொல்லேன் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : நம்ம மனசுக்குப் பிடித்தவர்களை…, இவ்வளவு ஏன்…, நம் மனம் கவர்ந்த ஆளுமையாளர்களை யாராவது அவமதித்து பேசினால், நமக்கு கோபம் வருமா, இல்லையா….

மேகலா : அட…, ஆமாம் கிருஷ்ணா…. எப்படி ஆளுமையாளர்களின் உணர்வு நம்மையும் தொற்றிக் கொள்ளுகிறதோ…, அதே மாதிரி, அவர்களை யாராவது குற்றம் குறை கூறினாலும், அதையும் நம்மால் தாங்க முடியாது கிருஷ்ணா… கோபத்தில் ரத்தம் சூடேறி, எதிரில் இருப்பவரிடம் கொட்டித் தீர்த்து விடுவோம்… இவ்வளவு ஏன்…, M. G. R. பற்றி யாராவது negative ஆகப் பேசினாலும், எனக்கு பொறுக்காது… குறைந்த பட்சம் அந்தப் பேச்சை தவிர்த்து விடுவேன்… அப்படீன்னா…, ஸ்ரீகிருஷ்ணா…, அந்தப் பரம்பொருளை…, புல்லாங்குழலும், கதாயுதமும் ஏந்தி, வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்திய பேரறிவாளன் கிருஷ்ணரை, தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை…, மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும்…, தனக்கான உழைப்பை உழைக்காமல் பலன் பெற முடியாது என்ற உண்மையை எச்சரித்துச் சொன்ன சத்தியத்தை, யாராவது அவமதித்துச் சொன்னால், என்னால் எதுவும் செய்ய முடியாத பட்சத்தில், சூடான கண்ணீரில் கொதித்துப் போவேன் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : எனக்குத் தெரியும் மேகலா…. ஆளுமையாளர்களின் ஆக்ரமிப்பு அவ்வளவு ஆதிக்கம் கொண்டது மேகலா…

மேகலா : நிஜம் கிருஷ்ணா

கிருஷ்ணர் : சரி…, ‘ஆளுமையாளர்களால்’ இந்த நாடும், வீடும் என்ன பலன் பெறுகிறது என்பது ஒருபுறமிருக்க…, நம்முடைய முன்னாள் ஜனாதிபதி, ஏவுகணைகளின் தந்தை டாக்டர் A. P. J. அப்துல் கலாம் போன்றவர்களின் ஆதிக்கமும், ஆளுமையும் நாட்டிற்கே பெரும் சொத்தாகவும் மதிக்கப்படுகிறது… அவர்களுடைய செயல்கள், தலைமுறை தாண்டியும் பலன்களைத் தருகிறது என்பது யதார்த்தமான உண்மை… இன்னும் ஒரு view இருக்கிறது. ஒரு கூட்டத்தில், விவரம் அறிந்தவனும், தன் அறிவால், மக்களால் திரும்பிப் பார்க்கப்படுகிறான். அதே போல, அறியாமையில் ஆட்டம் போடுபவன் கூட, கூட்டத்தை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்கிறான். அறிஞனை ரசிப்பவர்கள் ஆயிரம் பேர் இருந்தால், மூர்க்கனைக் கூட, ‘பரவாயில்லையே…, இவன் ஏதோ சொல்கிறானே’…, அல்லது ‘என்ன இப்படிப் பேசுகிறான்’ என்று விமர்சிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்… மகாத்மா காந்தியை நினைவு கொண்டு பின்பற்றுபவர்கள் மத்தியில், ஹிட்லர் கூட நினைவில் நிற்கத்தானே செய்கிறான். என்னதான் ராமராஜ்ஜியத்தை மனிதர்கள் விரும்பினாலும், வஞ்சகமாக அடக்கி ஆள்பவர்கள் பிடியில் சிக்கி, சிக்கலில் மாட்டத்தானே செய்கிறார்கள். ஏதோ ஒரு வகையில், அறியாமையும், தீவிரவாதமும், மக்களை அடக்கி ஆள்கிறது என்பது நடைமுறையில் நாம் பார்க்கத்தானே செய்கிறோம். இந்த மாயவலையில் இருந்து விடுபடுவதற்கு, ஒரு நிஜமான ஹீரோ, dominating personality, நூறு வருஷத்துக்கு ஒன்றிரண்டு பேர் பிறந்து, உன்னைப் போல தேசபக்தியாளர்களை மெய் சிலிர்க்கச் செய்கிறார்கள்… உங்களைப் போல மக்களிடையே பிறக்கும் குடும்பத் தலைவர்களும், நீ சொல்வது மாதிரி 200% dominatin personality யாக வாழ்ந்து, அவர்களால் இன்னொரு ஆளுமையாளர்களை, அவர்களைப் போல உருவாக்க முடிகிறதா என்றால்…, அது நடக்காத காரியம். ஆளுமையாளர்களில் ஒருவருக்கு, கோபம் பிரதானமாக இருக்கலாம்… ஒருவருக்கு ரசனை தனித்துவமாக இருக்கலாம்… ஏதாவது ஒரு குணம் தான் ஆளுமையாளர்களின் சாயல் அடுத்தவருக்கு இருக்கும். நூற்றாண்டுக்கு ஒரு அப்துல் கலாம் மட்டும் தான். இன்னொரு xerox copy கிடையாது… ஒரே ஒரு லார்டு அருணாச்சலம் மட்டும் தான். எத்தனை பிள்ளைகள் பிறந்தாலும், இன்னொரு லார்டு கிடையாது. ஒரு M. G. R. தான்…, இன்னொருவர் மக்கள் திலகம் ஆக முடியாது. மலை என்றால், அது அண்ணாமலை மட்டும் தான்… இது தான் ஆளுமையின் தனிச் சிறப்பு….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

பக்குவம் - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

பக்குவம் - பாகம் 8

ஆளுமை - பாகம் 5