பக்குவம் - பாகம் 5
கிருஷ்ணர் : ‘பக்குவமான நேரம்’ என்பது, சம்பந்தப்பட்டவர் சந்தோஷமாக இருக்கும் நேரம்… நம்மளோட அணுகுமுறையே காரியத்தை சாதிக்க வைத்து விடும்… பக்குவத்திற்கு அவ்வளவு வலிமை உண்டு மேகலா…. ‘பக்குவமான நேரம்’ – மிகச் சரியான நேரம் என்று சொல்லலாம். நேரம் பார்த்து, பக்குவமா, பதமா சொல்லு… எந்தத் தப்பும் வந்து விடக் கூடாது… எந்தத் தடையும் தடுத்து விடக் கூடாது. அதற்குத் தகுந்தாற் போல, ‘பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான் உண்மையான நோக்கம்…
மேகலா : கிருஷ்ணா…, பெண் பிள்ளைகள் பிறந்த எல்லோர் வீட்லயும் தவறாமல் வரும் ஒரு situation-ல் பக்குவம் எவ்வளவு சாமர்த்தியமாக செயல்படும் தெரியுமா கிருஷ்ணா….
கிருஷ்ணர் : என்னது…, சாமர்த்தியமாக செயல்படுகிறதா… சுவாரஸ்யமா இருக்கு… எங்க சொல்லு பார்ப்போம்…
மேகலா : கிருஷ்ணா…., திருமணம் முடிஞ்சி, பெண் அழைப்பிற்காக மாப்பிள்ளை வீட்டார் வருவாங்க இல்லையா… இது வரை சந்தோஷமாக வலம் வந்த அம்மாவுக்கும், அப்பாவுக்கும், மகள் நம்மை விட்டுப் பிரிந்து புருஷன் வீட்டிற்குச் செல்லப் போகிறாள் என்ற உண்மை கலங்க வைக்கும்… அதை விட அதிகமாக…, நம்ம பொண்ணு புருஷன் வீட்டில் சந்தோஷமாக வாழணுமே என்ற பயம் திகிலாய் மாறும்… நம்ம பொண்ணு கொஞ்சம் பக்குவமாய் நடந்து கொண்டால்…., அநாவசியமான பிரச்னை வராது என்று நினைத்து, தங்கள் செல்லப் பொண்ணை அழைத்து, அப்பா, தோள் மீது கை போட்டு, ‘பாப்பு, இது வரைக்கும் உனக்கு சமையல் கட்டு எங்க இருக்குண்ணே தெரியாது. இனி, கொஞ்சம் கொஞ்சமாய் சமையலைக் கற்றுக் கொள்ளணும்…. காலையில் எட்டு மணிக்கு எழுந்திருப்பாயே…, அதெல்லாம் விட்டுட்டு…, சீக்கிரம் எழுந்து, வாசப்படி பெருக்கி, தெளித்து கோலம் போடணும்… மாமியாருக்கு எல்லா வேலைகளிலும் ஒத்தாசையா இருக்கணும்… பாத்து, ‘பக்குவமா’ நடந்துக்கணும்டா செல்லம்… அம்மாவும், அப்பாவும் அடிக்கடி உன்னை வந்து பாத்துக்குவோம்…’ என்று சொல்லும் போது, அது வரை make-up அழியாமல், jolly-யாக மாப்பிள்ளையுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்த பாப்பு, அப்பா தோள் மீது சாய்ந்து, மேக்கப் கலைய அழுவாள்… இது எல்லா தகப்பன்களும் சந்திக்கும், பேசும் சாமர்த்தியமான ‘பக்குவம்’….
கிருஷ்ணர் : ஓஹோ…. ‘சாமர்த்தியமா நடந்துக்கோ…, அப்படீன்னு’, இந்தப் பக்குவத்திற்கு அர்த்தமா… ஓஹ்… சூப்பர்…, சூப்பர் மேகலா…. இந்தப் பக்குவம், மனிதர்களின் பேச்சு வழக்கில் கலந்து எப்படியெல்லாம் மனிதர்களைப் பக்குவப்படுத்துகிறது, பார்த்தாயா மேகலா… ‘பக்குவமா நேரம் பார்த்துச் சொல்லு’ – என்று ஆலோசனையாகிறது… ‘பக்குவமா எடுத்துச் சொல்லு’ – என்று ஆறுதலும், அரவணைப்பும் தருகிறது… ‘கண்டிப்பும், அன்பும்’ காட்டுகிறது…. ‘பக்குவம்’ சாமர்த்தியத்தைக் கூட கற்றுத் தருகிறது… அடேயப்பா… மனிதர்கள், பரபரப்பு, விரக்தி, கோபம், ஆசைகளை விட்டொழித்து மேன்மையடைவதை…, ‘பக்குவமடைதல்’ என்று வேதம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள். ஆனால், பேச்சு வழக்கில் மனிதர்கள், ஆறுதலும், அரவணைப்பும் தேவைப்படும் போதெல்லாம், பக்குவத்தை ரொம்ப, நம்பிக்கையுடன் கைப்பற்றுகிறார்கள். இந்த வகையில் யோசித்துப் பார்த்தால், ‘பக்குவம்’ மேன்மையான வார்த்தை என்று நன்றாகப் புரிகிறது… இல்லையா….
மேகலா : கிருஷ்ணா…., வாழ்க்கைப் பக்குவத்தை மட்டும் தான சொன்ன கிருஷ்ணா… சமையல் பக்குவத்தை சொல்லவேயில்லையே…. சாதமோ, பிரியாணியோ செய்யும் போது, பக்குவம் வந்தவுடன் இறக்கிறணும் என்று சொல்வது, ரொம்ப common word… ’பக்குவமா வெந்து விட்டதான்னு பாரு’ – என்ற வார்த்தையை உபயோகிக்காத நாளே கிடையாது… அதே மாதிரி, snacks செய்யும் போது…, வெல்லப்பாகு, ஜீரா தயாரிக்கும் போது, …, ‘பக்குவம்’ பார்க்க வேண்டியது கட்டாயம்… பக்குவம் தவறினால், பலகாரமே தப்பி விடும் கிருஷ்ணா…. சமையலில், ’பக்குவம்’ என்பது, ‘கரணம் தப்பினால் மரணம்’ என்பது போல… இந்தப் ’பக்குவம்’ தவறினால், சொதப்பிடும் கிருஷ்ணா…
கிருஷ்ணர் : வாவ்…! ஒரு வார்த்தை, அதனதன் இடத்திற்கேற்ப, ‘பக்குவமாய்’ பதிலளிக்குது பார்… உனக்கு ஒண்ணு தெரியுமா மேகலா… இந்தப் ‘பக்குவம்’ என்பது, வயசு ஏற ஏற வருவது என்று நினைத்தாயா….
(தொடரும்)
Comments
Post a Comment