பேச்சுத்தமிழ் - பாகம் 3
கிருஷ்ணர் : வாவ்! இவ்வளவுதான் பாடலா… ‘திருக்குறள்’ மாதிரி சின்னப் பாட்டு… கண்ணு முன்னே துள்ளிக் குதிக்கும் கன்னுக்குட்டியும், குட்டியை நக்கிக் கொடுக்கும் பசுமாடும், எவ்வளவு அழகாக கண்ணு முன்னே flash ஆகுது… ஆஹா…, இது பசுஞ்சாணத்தை விட தூய்மையானது…. மாட்டுத் தொழுவத்தை விட அழகாக இருக்கு மேகலா….
மேகலா : மாடு மேய்க்கும் கண்ணனுக்கு இந்தப் பாட்டு ரொம்பப் பிடிக்கும் என்று எனக்குத் தெரியும் கிருஷ்ணா… இன்னும் ஒண்ணு… நாட்டுப்புறப் பாடல்கள்…, பேச்சுத் தமிழில், அதுவும் வட்டார வழக்குகளில் பேசப்படும் அழகான தமிழ் இலக்கியங்கள் தானே கிருஷ்ணா… நாட்டுப் புறப் பாடல்களில், ராமாயணம், மகாபாரதம் கூட பாடப் பட்டிருக்கிறது கிருஷ்ணா… அந்தக் காலங்களில் தெருக்கூத்து, நாடகம், வில்லுப்பாட்டு, இவை மூலமாக பாடப்படும் பாடல்கள் அநேகமாக பேச்சுத்தமிழாகத்தான் இருக்கும் கிருஷ்ணா… அதிலும், வில்லுப்பாட்டு…, ஒருவர் கதையையோ, சம்பவத்தையோ விளக்கிச் சொல்லுவார். பின்னாடி ஒருவர் ஒத்து ஊதுவது மாதிரி…, ஆமாம்…, ஆஹா…, என்று சொல்லுவார். விளக்கிய பின்பு, அதையே எல்லோருமாக, வில்லின் இசையோடு சேர்ந்து பாட்டாகப் பாடுவார்கள்… நாட்டுப்புறக் கதைகள், புராணக் கதைகள், மற்றும் சமூக நிகழ்வுகளை பாடல்களாகப் பாடும் போது, வில்லை முதன்மையான இசைக்கருவியாக உபயோகிக்கிறார்கள். பக்கதாளமாக, உடுக்கை, தாளம், வீசுகோல், கட்டை போன்ற கருவிகளையும் உபயோகிப்பார்கள் கிருஷ்ணா… இதில் முக்கியமான விஷயம் என்னன்னா…, சம காலத்து நிகழ்வுகளை, சமூக நீதிகளைக் கூட, அசால்ட்டாக பாடலாக்கிப் பாடுவார்கள் கிருஷ்ணா… தேசபக்திப் பாடல்களும் பாடப்படும் கிருஷ்ணா…. அந்தக் காலங்களில், தென்மாவட்டங்களில் நடக்கும் திருவிழாக்களில் ஒரு நாள் கட்டாயம் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடக்கும்…
‘தந்தனத்தோம் என்று சொல்லியே
வில்லினில் பாட – வில்லினில் பாட
வந்தருள்வாய் கணபதியே
வந்தனங்கள் செய்து மகிழ்ந்தோம்
உன்னருள் தந்து வாழ்த்த வேணும்
கலைமகளே…
என்று ஒருவர் பாடப் பாட, கூடவே ஒருவர்…, ஆமாம்…, ஆமாம்…, என்று ஒத்து ஊதுவது போல பாடிக் கொண்டே வருவார்… அப்படியே content-ஐ எடுத்துப் பாடுவார்கள்… பேச்சுத் தமிழில்…, இந்த விதமான கிராமியப் பாடல்கள் ரொம்ப பிரபலமானது கிருஷ்ணா…. இன்னும் சொல்லப் போனால், நம்முடைய புராணக் கதைகள்…, அச்சில் பதிப்பதற்கு முன்பாக இப்படித்தான் மக்களிடையே பரவியது என்றால்…, அதுதான் சுவாரஸ்யமான உண்மை கிருஷ்ணா… கிராமத்து திருவிழாக்களில், வில்லுப் பாட்டு ஒரு நாள் என்றால், இன்னொரு நாள் தெருக்கூத்து நாடகம்… இந்த கலைஞர்கள் அணியும் make-up-ஏ ரொம்ப வித்தியாசமாக…, மக்களுக்கு ஆர்வத்தைத் தூண்டும் விதமாக இருக்கும் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : பேச்சுத் தமிழ் என்பது, ‘புழக்கத்தில் இருக்கும் வார்த்தை’ என்பதைத் தாண்டி, புராணக் கதைகளைச் சொல்வதற்கு ஒரு சாதனமாக, வெள்ளந்தியான கிராமத் தமிழை புழங்க விட்ட மொழி என்று கூட சொல்லலாம் போலயே…
மேகலா : நிச்சயம் சொல்லலாம் கிருஷ்ணா… நாடகத்தில் இதற்கான special தமிழ் கூட உண்டு… இலக்கியத் தமிழ் கிடையாது…, இசைத் தமிழ் கிடையாது…, இது ஒரு ‘நாடகத் தமிழ்’…. கிராமியம் சொட்டச் சொட்ட இனிக்கும் தேன்தமிழ்….
கிருஷ்ணர் : Oh! சூப்பர்….
மேகலா : இரு கிருஷ்ணா… தெருக்கூத்துல பேசும் வசனத்தை சொல்லுகிறேன். அதைக் கேட்டுட்டு, மொத்தமாக சூப்பர்னு பாராட்டு கிருஷ்ணா….
கிருஷ்ணர் : தெருக்கூத்து வசனம் உனக்குத் தெரியுமா….
மேகலா : ‘சத்தியவான் சாவித்திரி’ கூத்துல பாடும் பாட்டு தெரியும் கிருஷ்ணா…
‘ராசாத்தி ராஜா மகராஜாத்தி நம்ம சப
ராஜாதி ராஜ மக ராஜாத்திரத்ன சப
ராஜாதி ராஜன் வந்தேனே
வந்தேனையா வந்து வந்தனம் தந்தேனையா
வந்து நின்று சபைக்கு வந்தனம் தந்தேனையா
(சில சங்கதிகளைப் போட்டு விட்டு)
சபையோர்களே பெரியோர்களே
இன்று நம்ம கூத்திலே
சொற்குற்றம் பொருட்குத்தம்
எக்குத்தம் இருப்பினும்
குத்தத்தை மன்னித்து
பொறுத்துக் கொள்ளக் கேட்டுக் கொள்கிறேன்’
இப்படி சத்யவான் பாடிக் கொண்டே ஆரம்பிக்கும் கூத்துல, மெள்ள சாவித்திரி வந்து சத்யவானை சந்திப்பதாகக் காட்சி நகரும்… இந்தப் பாடலை, ஜதி சொல்லும் போதும், பாடலைப் பாடும் போதும், உச்சஸ்தாயியில் ராகத்தை இழுத்துப் பாடும் போது…, இன்னொருவர் துணைக்கு ராகத்தில் உச்சத்தில் கூட்டிப் பாடுவார். ஆணுக்கொருவர், பெண்ணுக்கொருவராக உச்சஸ்தாயியில் சுதி கூட்டுவார். அப்படிப் பாடும் போது, சுதி கூட்டுபவர், மேடையில் தானும் புகுந்து, பல பாவங்களைக் காட்டுவார்கள்… கூத்து பார்ப்பவர்களுக்கு இது சுவாரஸ்யமாக இருக்கும் கிருஷ்ணா… அவர்களுடைய costume, நின்றபடிக்கே ஆடும் நடனம்…, பாட்டோடு வசனம்…, அதிஅற்புதமான make-up…, ரொம்ப செயற்கையாக இருக்கும் என்பதை விட, ரொம்ப ரசிக்கும்படியாக, சாவித்திரியையும், சத்யவானையும், வேற லோகத்து மனுஷங்களாகப் பார்க்கத் தூண்டும் விதமாக இருக்கும் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : நீ பாடிய, சத்யவான் சாவித்திரி கூத்துப் பாட்டு, ‘நவராத்திரி’ படத்தில் இடம் பெற்றதுதானே….
(தொடரும்)
Comments
Post a Comment