கதை கதையாம் காரணமாம் - பாகம் 11
கிருஷ்ணர் : விசுவாமித்திரரின் கதையில் இருந்து நீ என்ன தெரிந்து கொள்ள விரும்புகிறாய்?
மேகலா : கிருஷ்ணா…, புனிதமான வேதங்களை உச்சரிக்கும் முனிவர்களைக் கண்டு, ஒரு மன்னனுக்கு பக்தியும், பணிவும் வருமென்றுதான் நாம் படித்திருக்கிறோம். தெய்வீக தேஜஸுடன் விளங்கும் வசிஷ்டரைப் பார்த்து, கௌசிக மன்னனுக்கு பொறாமை வருவதாகக் கூறப்பட்டிருக்கிறதே…. இது எப்படி கிருஷ்ணா….
கிருஷ்ணர் : இது…, பொறாமை என்று சொல்ல முடியாது… கேட்பதையெல்லாம் கொடுக்கும் காமதேனுப்பசு…, ஒரு சன்யாசிக்கு எதற்கு? நம் நாட்டிற்கு அழைத்துச் சென்றால், நாட்டு மக்களுக்கு பசுவிடமிருந்தே கேட்டுப் பெற்றுக் கொடுக்கலாமே…, என்று யோசிக்கிறான். எந்த மதிப்பு வாய்ந்த பொருட்களும்…, அரசனுக்குத்தான் சொந்தம் என்ற கர்வத்தினாலும்…, ‘முனிவர்’தானே…, அவரிடம் என்ன பலம் இருக்க முடியும் என்ற அலட்சியத்தினாலும் வந்த விளைவு…. என்ன இருந்தாலும்…., அவன் ஒரு நாட்டின் மன்னன் தானே… அவனுக்கு மஹரிஷிகளின் ‘வலிமை’ பற்றித் தெரியாது… சாபம் கொடுத்து விடுவாரோ என்ற பயமாவது இருந்திருக்கலாம். எல்லாவற்றையும் மீறி…, தன் பலத்தின் மீது அவ்வளவு நம்பிக்கை….
மேகலா : கிருஷ்ணா…., ஒரு மன்னன், தன் நாட்டு மக்களுக்கு, தன் நாட்டில் இருக்கும் செல்வத்தை வளப்படுத்தித்தானே கொடுக்க வேண்டும்… ‘கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கலாமா’….
கிருஷ்ணர் : நீ என்ன பேசுற… உலகில் மிகச் சிறந்தது எதுவானாலும், தன்னுடைய நாட்டிற்கே சேர வேண்டும் என்று நினைப்பது ஒரு க்ஷத்திரியனின் நிலைப்பாடு… விசுவாமித்திரர் கொஞ்சம்…, கொஞ்சமென்ன கொஞ்சம்…, அதிகப்படியாகவே கெடுபிடியாக நடந்து கொண்டார்…
மேகலா : சரி…, இதெல்லாம் இருக்கட்டும் கிருஷ்ணா…. ஒரு முக்கியமான கேள்வி…. கோபம், பிடிவாதம், பொறாமை, கர்வம், அலட்சியம்…, இப்படிப்பட்ட குணங்களைக் கொண்டு ஒரு க்ஷத்திரியனால் தவம் செய்ய முடியுமா… பிரம்மரிஷியாக முடியுமா கிருஷ்ணா… ‘தவம் செய்வது’, ‘யாகம் வளர்ப்பது’…, இதையெல்லாம் சாதாரண மக்களால் நினைத்துப் பார்க்க முடியுமா?
கிருஷ்ணர் : ஏன் முடியாது… நீ சொன்னாயே… கோபம், பிடிவாதம் etc., etc., இத்தோடு முயற்சி…, அதற்கான முனைப்பு இரண்டும் சேர்ந்து இருக்கும் ஒரு மனிதன், தமோ குணங்களை அடக்கி, சத்வ குணங்களை மேலோங்கச் செய்ய முடியும் என்று நாம் படித்திருக்கிறோமே… விசுவாமித்திரர், தவம் செய்யப் போகிறேன் என்றதும்…, தன் புலன்களையெல்லாம் அடக்கி விட்டார் என்று சொல்லப்படவில்லையே… இயல்பான குணம் வெளிப்பட்டு, தவத்திலிருந்து பிசகத்தானே செய்கிறார்…. மறுபடியும், மறுபடியும் முயற்சி செய்கிறார்…. உனக்கு ஒண்ணு தெரியுமா… தவம் செய்வதற்கு, முயற்சி, உறுதி, முனைப்பு இருந்தாலே…, பாதி வெற்றி கிடைத்து விடும்… இது, பகவத் நாமத்தை சொல்வதினால் மட்டும், ‘தவம்’ ஒருமுகப்படுமா… ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளி, தன் தொழிலில், முயற்சி, ஈடுபாடு, உறுதி, முனைப்பு என்று ஒருமுகப்பட்டு உழைக்கும் போது, அந்த கர்மத்தின் பலன், வெகு சிறப்பாக இருக்கும். இதையே ‘கர்ம யோகம்’ என்று சொல்கிறோம் அல்லவா… அப்போ, ‘ஞான யோகத்தை’ ஒரு தவமாகச் செய்யும் க்ஷத்திரியன், பிரம்மரிஷியாக ஆக முடியாதா… சாதாரண மனிதர்கள், ‘தவம் செய்வது’ முனிவர்களுடைய வேலை என்று விலகிப் போவதால் தான்…, இங்கு நிறையப்பேருக்கு, மனதை control பண்ணுவது, அடக்குவது என்பது, out of their power என்று நினைக்கிறார்கள். ஒரு ‘அப்துல் கலாம்’ இப்படி நினைத்திருந்தால், இந்தியாவில், ‘ஏவுகலமும்’, ‘ஏவுகணையும்’ சாத்தியப்பட்டிருக்குமா… உலகத்தில், ஒவ்வொரு அசாத்தியமான வேலைகளுக்குப் பின்னாலும், ஒரு அயராத உழைப்பு, ஓய்வில்லாத முயற்சி, சிதறாத முனைப்பு இவை இருக்கின்றது… அதனால் தான், சாதாரண மக்களிடையில், நம்பிக்கை நட்சத்திரமாக சில மகான்கள் அவதரிக்கின்றனர்…. விசுவாமித்திரரும் அப்படியே… நல்ல வேளை, இந்தக் கதையை select பண்ணினாய்… சாதாரண மனிதர்களாலும், அளப்பரிய சாதனையைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை, இந்த புத்தாண்டு தினத்தில் என்னால் மறுபடியும் சொல்ல முடிந்தது… உனக்கு, ‘ராமாயணம்’ எழுதிய வால்மீகி முனிவரின் கதை தெரியுமே… ஏன் உனக்கு இந்த சந்தேகம்… வழிப்பறி செய்து பிழைத்து வந்த ‘ரத்னாகர்’, மாபெரும் காப்பியமாகிய இராமாயணத்தை எழுதும் வால்மீகி முனிவராக ஆக முடியும் என்றால்…, சாதாரண மனிதர்களால் தவம் செய்ய முடியாதா…, சாதனை படைக்க முடியாதா… ரத்னாகரிடம் கேட்கப்பட்ட கேள்வி…, ‘நீ செய்யும் இந்தப் பாவச் செயல்களில், உன் குடும்பத்தாரும் பங்கு கொள்கின்றனரா…, இல்லை, பாவம் முழுவதையும் நீயே சுமக்கிறாயா…?’ இதற்கு விடை தேடியதன் விளைவுதான்.., துறவு, பந்தம், பாசம், உறவு, உலகம்…, என்று எல்லாவற்றையும் விட்டு விலகி நிற்கத் தோன்றியது… மனசுக்குள் ஏற்பட்ட பல கேள்விகளுக்கும்…, தனிமை பதில் கூறத் தொடங்கியது… மனசு, கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்படத் தொடங்கியது…. ரத்னாகர், தான் இருப்பதையே மறந்து போய், தவத்தில் அமர்ந்தார்… ‘வால்மீகி’யாகி விட்டார்…. விசுவாமித்திரரோ…, தன்னை விட பலம் வாய்ந்த ஒருவரை சந்திக்கும் போது…, அவரை விட பலம் வாய்ந்தவராக மாற வேண்டும் என்ற போட்டி மனப்பான்மை…, அவரை பிரம்மரிஷியாக்கியது… இப்படித்தான், இன்றைய காலகட்டத்தில்…, அண்டை நாடுகளை விட, நம் நாடு, அணுசக்தியில் வல்லமை பெற வேண்டும் என்ற முனைப்புடன் இருந்ததால் தானே, நம்ம நாடும், digital மயமாவதற்கு, பாரதரத்னா Dr. A. P. J. அப்துல் கலாம் அவர்களால் அடித்தளம் போடப்பட்டது… வைராக்கியம், ஒவ்வொரு மனிதனையும், தலைகீழாய் புரட்டிப்போடும் வலிமை வாய்ந்தது….
கிருஷ்ணர் : மேகலா…., நீ ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்…. விசுவாமித்திரர், வசிஷ்டரை விட தான் பலம் வாய்ந்தவனாக மாற வேண்டும் என்ற வைராக்கியத்தில் தவம் செய்யத் துணிந்தார்… தனக்குத் தானே மனது அடங்கி தவம் செய்யவில்லை… இந்த நேரத்தில் திரிசங்கு மூலமாக, வாய்ப்பு கிடைத்த நேரத்தில், தன் திறமையை வெளியுலகுக்குக் காட்டத் துணிந்து விட்டார். தவம் செய்பவர்களுக்கு முதலில் மனசு பக்குவப்பட வேண்டும். பக்குவப்படாத மனசு, கோபத்தில் எதையும் யோசிக்காது… மனசு கோபப்படத் தான் செய்யும்…
மேகலா : ‘உத்தங்கர்’ மாதிரி…, இல்லையா கிருஷ்ணா….
கிருஷ்ணர் : அப்போ…, நீ…, அடுத்து உத்தங்கர் கதையைச் சொல்லப் போகிறாய்…. Right?
(தொடரும்)
Comments
Post a Comment