கதை கதையாம் காரணமாம் - பாகம் 17
மேகலா : கௌசிகனுக்கு தர்மவியாதர் கூறிய விளக்கங்கள் தொடர்ந்தன…கெட்ட காரியம் செய்வதில் விருப்பமுடைய ஒருவரை, அவர் கல்வி அறிவு கூட சரி செய்வதில்லை. எல்லா தர்மங்களையும், correct-ஆக அனுசரிப்பவருக்குக் கூட, அவருடைய முயற்சிக்கேற்ற பலன் கிடைப்பதில்லை… கெட்ட வழியில் செல்பவர்கள், சுகத்தை அனுபவிக்கிறார்கள். ஒருவர் எந்தவித முயற்சியும் எடுக்காமலேயே, அவர்களுக்கு பணம் வந்து சேரலாம். ஒருவர், எவ்வளவு உழைத்தும், உழைப்புக்கேற்ற பலன் கிடைப்பதில்லை…. தவமிருந்து பெற்ற பிள்ளை, நம்முடைய பெயரைக் கெடுக்கும்படி இருக்கலாம்… செல்வம் நிறைய இருப்பவனுக்கு, நோய் வந்து வாட்டலாம். அவனால் நல்ல உணவை சாப்பிட முடியாமல் போய் விடும். ஆரோக்யமாக இருப்பவனுக்கு, நல்ல உணவு கிடைக்காமல் போகலாம்… இவையனைத்துக்கும் ஒரே காரணம்…, முன்வினைப்பயன் தான். முன்பிறவியில் நாம் செய்த வினைகளின் பலனை, இந்தப் பிறவியில் நாம் அனுபவித்தே தீர வேண்டும். அதிலிருந்து தப்பிக்கவே முடியாது. அதனால் இந்தப் பிறவியில் நன்மைகளை மட்டுமே செய்ய வேண்டும். இந்த நன்மைகள் அடுத்த பிறவியில், நமக்கு நல்ல வாழ்வைக் கொடுக்கும். இப்பிறவியில், முன்வினைப்பயன் காரணமாக வரும் துன்பங்களை எதிர்கொள்ளும் தைரியத்தையும் கொடுக்கும் என்று, ‘முன்வினைப்பயனை’ முழுமையாக விளக்கினார்… அப்பொழுது கௌசிகர், தர்மவியாதரை, ‘ஜீவன் இறந்தார் என்றுதானே சொல்கிறோம்… அப்படியானால், இந்த உடல் மடியும் போது, ஜீவனும் மடிவதாகத்தானே அர்த்தம்’ என்று கேட்டார். அதற்கு தர்மவியாதர், ‘உடல் மடியும் போது, ஜீவன் அழிவதில்லை. அதற்கு உடல் என்பது அணியும் உடை மாதிரி. ஒரு உடலை விட்டு இன்னொரு உடலை அடைவதை, ‘பிறப்பு, இறப்பு’ என்கிறார்கள். ஜீவன், எப்போதும், தன் முனைவினைப் பயனால் தொடரப்பட்டு வருகிறது’ என்று விளக்கினார்.
இதைக் கேட்ட கௌசிகர் அடுத்து, மனிதனுடைய மூன்று குணங்களைப் பற்றி விளக்குமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு தர்மவியாதர், ‘மனிதர்கள் மூன்று விதமான குணங்களைக் கொண்டவர்கள். முதல் வகையானவர்கள், சாந்தம், பொறுமை, தயை குணம் கொண்டவர்கள். இவர்களுக்கு, பொருள் ஈட்டுவதில் விருப்பம் இருக்காது. பிறர் நலனில் அக்கறை கொண்டவர்கள். மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வு இன்றி அனைவனரையும் சமமாக மதிப்பவர்கள். இரண்டாம் வகை மனிதர்கள், பொருள் ஈட்டுவதில் விருப்பம் அதிகம் உள்ளவர்கள்… அதனால், பரபரப்பாயும், வலிமை உடையவர்களாயும் இருப்பவர்கள். இருப்பினும், அகம்பாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். மூன்றாம் தரப்பினர், சோம்பேறியாக, கோபம் கொள்பவர்களாக, அடுத்தவரிடம் மரியாதை இல்லாதவர்களாகவும் இருப்பார்கள்…’ என்று மனிதர்களிடையே உள்ள வேறுபட்ட குணங்களை விளக்கிச் சொன்ன தர்மவியாதர், தர்மத்தைப் பற்றியும், பாவபுண்ணியங்களைப் பற்றியும் விளக்கிக் கூறினார். அதன் பிறகு, தாய் தந்தையருக்குப் பணிவிடை செய்து புண்ணியலோகம் அடையுங்கள் என்று கௌசிகரை வாழ்த்தி விடை கொடுத்து அனுப்பினார். கௌசிகரும், தர்மத்தின் சூட்சுமங்களையும் நுணுக்கங்களையும் அறிந்து கொண்ட மனத்திருப்தியுடன், தர்மவியாதரை வலம் வந்து வணங்கி விடை பெற்றுச் சென்றார்….
கிருஷ்ணர் : கதை முடிந்ததா… சரி…, கேள்விகளைக் கேட்கலாம்….
மேகலா : கிருஷ்ணா…, இந்தக் கதையில் வரும் பதிவிரதை, முனிவர் பிட்சை எடுக்க வரும் பொழுது, வெளியே வந்து அவரிடம் சொல்லாமல் உள்ளேயே இருந்து காத்திருக்கச் சொன்னது முறையாகுமா? கணவருக்குப் பணிவிடை செய்கிறேன் என்று சொன்னாலும், காலம் கடத்தும் போது, என்னன்னு நினைப்பது… அவர் ஒன்றும் பிச்சைக்காரர் இல்லையே….
கிருஷ்ணர் : ஓஹோ! நீ இப்படிக் கேட்கும் போது, நீ சொல்வதுதான் சரியென்று தோணலாம்… இருந்தாலும், உன்னை ஒன்று கேட்கிறேன்… நீ வேலை செய்யும் போது, வேற யாரோ வேண்டாம்…, உன் வீட்டுக்காரர் கூப்பிட்டால், நீ என்ன செய்வாய். அப்படியே அந்த வேலையை விட்டுவிட்டுப் போவாயா…, செய்யும் வேலையை முடிச்சிட்டுப் போவாயா…
மேகலா : குழம்பு தாளிக்கிற வேலையை, அரைகுறையாய் விட முடியுமா… அதை முடிச்சிட்டுத்தான் போவேன். ‘இதோ வர்ரேன்’ என்று சொல்லிட்டு, வேலையைப் பார்ப்பேன்…
கிருஷ்ணர் : அதைத்தான், அந்தப் பொண்ணும் செய்கிறார்… வேலையை முடிச்சிட்டு வரட்டும் என்று காத்திருப்பதில் என்ன போச்சு… தவம் செய்பவர்; பற்றை விடுத்தவர்; வேதம் தெரிந்தவருக்கு.., பொறுமை கூடவா இல்லாமல் போயிற்று. அதனால்தான், அவர் கோபமாகப் பார்த்தாலும்…, அந்தப் பார்வை, அந்தப் பொண்ணை சுட்டெரிக்காது… அதனால்தான், அவளும், மகரிஷிகளின் தன்மை என்ன என்று பாடம் எடுக்கிறாள்… தர்மவியாதரைப் பற்றி, மகரிஷிக்கு எடுத்துச் சொல்கிறாள். ஒரு குறள் தெரியுமா உனக்கு…
‘தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை’
கடவுளைக் கூட கும்பிட வேண்டாம்…, தன் புருஷனை மட்டும் தொழுதால் போதும்… அவள், மழை பெய்யச் சொன்னால், உடனே மழை பெய்யும் – என்று வள்ளுவர், கணவனுக்குப் பணிவிடை செய்பவரை கொண்டாடுகிறார். அதனால்தான், அந்த அம்மணிக்கு, முனிவர், கொக்கை எரித்தது கூட தெரிகிறது… தாய் தந்தையருக்கும், குடும்பத்தாருக்கும், தன்னைச் சார்ந்தோருக்கும் பணிவிடை செய்து, இனிமையாகப் பழகுவது…, முனிவர்கள் தவம் செய்வதை விட மேலானது… இப்படிப்பட்டவர்கள், முனிவரை வேண்டுமென்றே காக்க வைக்க மாட்டார்கள்…
(தொடரும்)
Comments
Post a Comment