கதை கதையாம் காரணமாம் - பாகம் 18
மேகலா : கிருஷ்ணா…, பதிவிரதை, மிதிலாபுரியில் வாழும் தர்மவியாதரைச் சென்று பார்க்கச் சொன்னவுடன், ஒரு எதிர்பார்ப்புடன் தானே, மிதிலாபுரிக்கு வருகிறார். வந்த இடத்தில், தர்மவியாதர் முனிவரை வரவேற்று, ’நீங்கள் பார்த்த பார்வையில் கொக்கு எரிந்து போனதால், அந்தப் பெண்மணி, என்னையும் கொக்கென்று நினத்தாயா என்று கேட்டு, என்னிடம் அனுப்பினாரா’ என்று கேட்டதும்…, ஏன் திகைத்துப் போகணும்….
கிருஷ்ணர் : இதெல்லாம் ஒரு சந்தேகமா… கௌசிகர் ஒரு முனிவர். இயல்பு வாழ்க்கையில் வாழும் பெண்மணிகளிடத்தும், ஒரு கசாப்புக்கடைக்காரரிடமும் தர்மசிந்தனை உண்டு என்பதை அறியாதவர். ஒரு எதிர்பார்ப்புடன் தான் வருகிறார் என்றாலும்…, ஒரு கசாப்புக்கடைக்காரர், இவ்வளவு துல்லியமாக, எந்த நிகழ்ச்சியையும் பார்க்காமல், யாரிடமும் கேட்காமல், கொக்கு எரிந்ததையும், அதை நேரில் பார்த்த மாதிரி சொன்ன பதிவிரதையையும் சுட்டிக் காட்டும் போது, கசப்புக்கடைக்காரருக்கு இத்தனை தவவலிமையா என்ற வியப்பு வருவது இயற்கைதான்… அவர் இடத்தில் யார் இருந்தாலும் திகைக்கத்தான் செய்வார்கள்….
மேகலா : கிருஷ்ணா…, முதலில் கௌசிக முனிவருக்கு ஒன்றும் புரியவில்லை… தர்மவியாதரின் ஆழ்ந்த ஞானத்தைப் பார்த்ததும்…, ஒவ்வொரு சந்தேகமாகக் கேட்டுத் தெளிகிறாரே…
கிருஷ்ணர் : சனாதன தர்மத்தின் தன்மை அப்படிப்பட்டது மேகலா…முதலில், மிகவும் துன்பப்படுகிறவர்களை…, இவர்கள் ஏன் ஏழையாக இருக்கிறார்கள்…, இவர்கள் என்ன பாவம் செய்தார்கள்…, இப்படிக் கஷ்டப்படுகிறார்களே…, என்று நம்ம மனசுல ஆயிரம் கேள்விகள் ஓடும்… அது மட்டுமல்ல…, மனுஷன் ஏன் பொய் சொல்கிறான்…, பொய் சொல்வதனால் வரும் பாவம்…, சில சமயங்களில், பொய் கூட நன்மை விளைவிக்குமா…, என்பது போன்ற எல்லா கேள்விகளுக்கும், மனிதனுடைய வினைச்செயல்கள் தான் காரணம் என்றும்…, மனிதனுடைய ஒழுக்கமும், நல்ல பண்புகளும் தான் தலை சிறந்த தர்மம் என்றும் சனாதன தர்மம் வலியுறுத்துகிறது… ஒவ்வொன்றாய் விளக்க, விளக்க, சனாதன தர்மத்தின் மேன்மை புலப்படுகிறது. … இன்னும் ஒன்று, தர்மத்தைக் கடைப்பிடிப்பவர்கள் யாராயினும், அது கசாப்புக்கடக்காரராக இருந்தாலும்…, தர்மத்தை விளக்கும் தகுதி படைத்தவர்களே….
மேகலா : வாவ்! உன்னுடைய பதிலால், சனாதன தர்மத்தின் மேன்மை எனக்கும், பல வகையில், சந்தேகத்தை தெளிவுபடுத்துகிறது கிருஷ்ணா… ஆனாலும், எனக்கு ஒரு சந்தேகம் வருது கிருஷ்ணா….
கிருஷ்ணர் : சனாதன தர்மத்தில் சந்தேகமா….
மேகலா : தர்மத்தில் சந்தேகமில்லை… நீ கடவுள்… பூலோகத்தில் சொல்லப்பட்ட அனைத்து தர்மங்களும், மனிதர்களின் நன்மைக்காகத்தான் என்று படைத்தவன்… நாங்கள், ‘கீதை’யை நம்ம நாட்டின் பெருமையாகக் கருதுகிறோம். அதை சனாதன தர்மத்தின் அடையாளமாக வைத்திருக்கிறோம்… எனக்கு என்ன சந்தேகம்னா… போர் புரியும் களத்தில், போர் புரிய மாட்டேன் என்று சோர்வுற்ற அர்ஜுனனுக்கு சொல்லப்பட்டது கீதை… எப்படி கிருஷ்ணா…, போர் புரிய கட்டாயப்படுத்தும் நேரத்தில், இப்பேற்பட்ட, வேதத்திற்கு சமமான…, இல்லையில்லை, வேதத்தையே எடுத்துரைக்க முடிகிறது…. கீதையில், கிருஷ்ணர்…, கொலை செய்யச் சொல்லுகிறார் என்று இளக்காரமாகப் பேசும் மனுஷங்களும் இருக்கிறார்களே கிருஷ்ணா…கீதையைப் படிக்காதவங்களும்…, ‘இது கொலை நூல்’ என்றே சொல்கிறார்களே கிருஷ்ணா… இதற்கு நீயே விளக்கம் சொல்லு கிருஷ்ணா….
கிருஷ்ணர் : எல்லோருக்கும் வரும் சந்தேகம் உனக்கும் வந்து விட்டதா… சரி…, இப்போ, ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்குமிடையே நடப்பது என்ன…?
மேகலா : போர்தான் கிருஷ்ணா…
கிருஷ்ணர் : ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்குமிடையே நடப்பது….
மேகலா : அதுவும் போர்தான்…
கிருஷ்ணர் : Operation Sindoor என்ன…
மேகலா : அது…, இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்குமிடையே நடந்த போர்…
கிருஷ்ணர் : இந்தப் போரெல்லாம் எதனால் வந்தது என்பது ஒருபுறமிருக்கட்டும்… போரில் யாருமே கொல்லப்படவில்லையா… எதுவுமே நாசமாகவில்லையா….
மேகலா : ஐயோ கிருஷ்ணா… ஈரான், Arab country-யினுடைய செல்வக் களஞ்சியமான எண்ணெய்க் கிணறுகள் மீது குண்டு வீசினால்…, உலகமே petrol இல்லாமல், இயக்கம் நின்று போகும்… முந்தாநாள், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானின் hospital மீது குண்டு வீசி, 450 பேர் உயிரிழந்ததாக செய்தி வந்துள்ளது கிருஷ்ணா… நம்ம operation sindoor-ல், தீவிரவாதக் கூடங்கள் தகர்த்தெறியப்பட்டன. அதில் எத்தனை பேர் பலியானார்கள் என்று கணக்கெடுக்கக் கூட முடியவில்லை…
கிருஷ்ணர் : சரி…, போர் என்றால் இப்படித்தான். யாராவது போரை நிறுத்த முயல்கிறார்களா…, நிறுத்தினால் நல்லது என்றுதான் நினைப்பார்கள். ஆனால், யார் போய் சமாதானம் பேசுவது… ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் ஆகாது… சைனாவுக்கும் ஜப்பானுக்கும் ஆகாது.. அமெரிக்கா யாருக்கும் கட்டுப்படாது… இப்படியிருந்தால், யார் போர் நிறுத்தம் செய்ய முன் வருவது… உலகம் தொடங்கிய நாளிலிருந்து, இன்று வரை, மனிதன் தான் வல்லமை பெறுவதற்காக, மெலியவனை அடக்கியாள தயங்கியதேயில்லை. அதற்காக, எத்தனை நாசம் விளைந்தாலும், அதைப்பற்றியெல்லாம் யோசிப்பதேயில்லை… இதில் கிருஷ்ணர், கொலை செய்யத் தூண்டுகிறார் என்ற குற்றச்சாட்டுக்கு நான் பதில் சொல்லுகிறேன்…
(தொடரும்)
(அடுத்த பகுதியுடன் நிறைவு பெறும்)
Comments
Post a Comment