திருக்குறளில் வாழ்வியல் - பாகம் 3

மேகலா : அன்புடையவர்களின் அன்புக்கு, அர்த்தம் சொன்ன வள்ளுவர், ‘அறம்’ என்பதற்கு விளக்கம் எப்படிக் கொடுக்கிறார் தெரியுமா….

‘அழுக்காறு அவா, வெகுளி, இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்’

கிருஷ்ணர் : இதன் ஒவ்வொரு சொல்லுக்கும் அர்த்தம் என்ன மேகலா…

மேகலா : கிருஷ்ணா…., அழுக்காறுன்னா, பொறாமை…, அவா – பேராசை, வெகுளி – கோபம், இன்னாச்சொல் – கெட்ட வார்த்தை…, கொடுமையான வார்த்தை பேசுதல்… – இந்த நான்கையும், நமக்குத் தேவையில்லை என்று ஒருவர் ஒதுக்கி வைத்து வாழ்ந்தால், அதுவே சிறந்த அறமாகும்… வேதம் கற்பதை விட…, கடவுள் மேல் பக்தி செலுத்துவதை விட…, பெரும் செல்வம் தேடுவதை விட, ஒரு மனிதன், பொறாமை, பேராசை, கோபம், கெட்ட வார்த்தையை விட்டொழித்தலே சிறந்த தர்மமாகும் என்கிறார் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : ஒரு நல்ல மனுஷன், அன்புடையவனாக, சிறந்த வாழ்க்கைத்துணை கொண்டவனாக, செயற்கரிய செயலைச் செய்பனாக இருந்து விட்டால்…, யப்பா…, அப்படிப்பட்ட மனிதர்கள்…, தெய்வத்திறகு சமமானவர்கள் ஆகிறார்கள் இல்லையா… குறள், வாழ்வியலை மிக எளிமையாக நமக்குக் கற்றுக் கொடுக்கிறது மேகலா…

மேகலா : ஆமாம் கிருஷ்ணா… குறளைப் படிக்கப் படிக்கத்தான்…, வாழ்க்கையே புரிகிறது கிருஷ்ணா….

கிருஷ்ணர் : ஆமாம்…, அது என்னவோ உண்மைதான்… வாழ்வியலில் நம் அனுபவம் எவ்வளவு உண்மையோ, அதே போல, திருக்குறளும், அனுபவத்தை விட வலிமையான உண்மை... சரி…, ஒரு நல்ல மனிதன்…, செயற்கரிய செயலைச் செய்யும் திறமையாளனுக்கு வலிமை தருவது எது…? இதற்கு வள்ளுவர் என்ன சொல்லுகிறார்…

மேகலா : எத்தனையோ சொல்லியிருக்கிறார் கிருஷ்ணா… அதில் மிகச் சிறந்த வலிமை…

‘’தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்

வன்மையுள் எல்லாம் தலை’

என்ற குறள்தான் கிருஷ்ணா… தம்மை விட அறிவிலும், அனுபவத்திலும் சிறந்த பெரியவர் அறிவுரை மற்றும் துணையோடு செயல்படுவது, அவர்களை ஆபத்தில் இருந்து காக்கும் வலிமையான பலம் ஆகும் என்று வள்ளுவர் சொல்லுகிறார் கிருஷ்ணா… தம்முடைய அறிவு நம்மைக் காக்கும் அரண் போன்றதுதான் என்றாலும், அறிவிலும், அனுபவத்திலும் சிறந்த துணை ஒன்று இருந்தால்…, அதை விட பலம் வேறு எதுவும் இருக்க முடியாது என்கிறார் கிருஷ்ணா… எனக்கு ஒரு சந்தேகம் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : என்ன சந்தேகம்… நல்லாதான சொல்லியிருக்காரு…

மேகலா : அனுபவத்தில் சிறந்த பெரியோர் இல்லாதவங்க என்ன செய்வாங்க கிருஷ்ணா….

கிருஷ்ணர் : திருக்குறள் படிச்சி தெரிஞ்சிக்குவாங்க… வேலை பார்க்குமிடத்தில், நம்மை விட மேலதிகாரிகளிடம் கேட்டு தெரிஞ்சிக்குவாங்க… கல்லூரியில் படிக்கும் போது, ஆசிரியரிடம் கேட்டு project பண்ணலாம்… பெரியோர்கள் என்றால்…, கேட்பவர்களுக்கு நன்மையை எடுத்துக் கூறும் அனைவருமே டாக்டர் A. P. J. அப்துல் கலாம் தான்… எப்படி செயற்கரிய செயலைச் செய்து ஒருவர் புகழ் பெறுகிறாரோ…, அதே மாதிரி, அவர்களுக்கு ஆலோசனை சொல்லி, அவரோட மேலதிகாரி வலிமையானவராகிறார்… புரியுதா….

மேகலா : புரியுது கிருஷ்ணா…. நான் நெனச்சேன்… நம்ம வீட்ல ஆலோசனை சொல்ல பெரியவங்க இல்லேன்னா என்ன பண்றதுன்னு தோணுச்சி… அதான் அப்படி கேட்டுட்டேன்…

கிருஷ்ணர் : சரி…, நல்ல மனிதர்களின் தனித்தன்மை எப்படி இருக்க வேண்டும்…

மேகலா : பொறாமை, கோபம், பேராசை, கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாத ஒருவன் எந்த வகையில் தன்னைக் கட்டுப்படுத்தி சீர்படுத்த முடியும்… கிருஷ்ணா…, ரொம்ப அழகாக வள்ளுவர், நல்லவருடைய மனதைத் தொட்டு, நம்மையெல்லாம் சீர்படுத்துகிறார் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : நல்லவருடைய மனதைத் தொட்டு நம்மை சீர்படுத்துகிறாரா…, எப்படி…

மேகலா : டாக்டர், பல்ஸ் பார்த்து, ரத்த அழுத்தத்தை சீர்படுத்துவதில்லையா…, அது மாதிரி…

‘சென்ற இடத்தால் செலவிடாது தீது ஒரீஇ

நன்றின்பால் உய்ப்பது அறிவு’

கண் போன போக்கிலே, மனச அலைய விடாமல், தீயதை கிட்ட வர விடாமல், நல்ல வழியில் மனதை செலுத்துவதுதான்…, உண்மையான அறிவாகும்… நல்லவர்கள், கண்டபடி அலையும் மனசை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள். அறிவைப் பயன்படுத்தி, நல்ல காரியத்தை செயல்படுத்த வேண்டும். அதற்கு மனசை அலைக்கழிக்க விடக் கூடாது… இது எல்லா செயல்களுக்கும் அடிப்படை, ஒழுக்கமாகும்… செயற்கரிய செயல் செய்பவர்களுக்கு, இதுதான் தனித்தன்மை…. தவம் செய்யும் முனிவர்கள் எல்லோரும், முதலில், அலைபாயும் தங்கள் மனசைக் கட்டுப்படுத்தி தியானம் செய்கிறார்கள்…. எனக்கு மகாபாரதத்தில், ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது கிருஷ்ணா…..

(தொடரும்)

Comments

Popular posts from this blog

பக்குவம் - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

கதை கதையாம் காரணமாம் - பாகம் 12

பக்குவம் - பாகம் 8