கதை கதையாம் காரணமாம் - பாகம் 19 (நிறைவுப்பகுதி)
கிருஷ்ணர் : இதில் கிருஷ்ணர்…, கொலை செய்யத் தூண்டுகிறார் என்ற குற்றச்சாட்டுக்கு நான் பதில் சொல்லுகிறேன்… அடுத்த நாட்டைக் கைப்பற்றத் தூண்டுவது மகாபாவம்…. ஆனால், தன்னை அழிப்பதற்கு ஒருவன் புறப்பட்டால், அவனுடன் சண்டை போட்டு ஜெயிக்க வேண்டும் என்று ஒருவன் நினைத்தால், அதில் தப்பேயில்லை… தமிழில் ஒரு பழமொழி உண்டே…. ‘வம்புச் சண்டைக்குப் போக மாட்டேன்…, வந்த சண்டையை விட மாட்டேன்’ – என்று சொல்வதில் தவறு கிடையாது. அந்த சண்டையில் தர்மம் ஜெயிக்க வேண்டும். நல்லவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பது பொது விதி. உரிமைக்கான போர் என்று வந்தவுடன், பின் வாங்குவது, தன்னை நம்பிய மக்களை நட்டாற்றில் விடுவதற்குச் சமம்…. உன்னை ஒன்று கேட்கிறேன்… தீவிரவாதிகள், பாரத மக்களை, வரைமுறையில்லாமல் தாக்கும் போது, நம் அரசாங்கம், ‘போர்’, அதனால் ‘விளைகிற இறப்பு’…, சனாதன தர்மத்திற்கு எதிரானது…, அதனால் விட்டுக் கொடுக்கிறோம் என்று சொல்லி, போர் புரியாமல் இருந்திருந்தால், நாட்டு மக்கள் அரசாங்கத்தை போற்றவா செய்வார்கள்… திருப்பி அடித்ததனால், மக்கள் அரசாங்கத்தை வெறுக்கவா செய்தார்கள். இதில் தர்மம் என்னவென்றால், தீவிரவாதம் செய்தவர்களுக்கு நாம் கொடுத்தது பதிலடி. மற்றப்படி, அவர்கள் அப்பாவி நாட்டு மக்களை அழிப்பது எங்கள் நோக்கமல்ல என்று சொல்லும் போதுதான், அதிலிருக்கும் தர்மத்தை நாம் பார்க்கிறோம். எந்த நாட்டைச் சேர்ந்த மந்திரிகளும், மக்களும் நம்மை எதிர்த்து வரும் நாட்டின் ராணுவத்தை எதிர்க்கத்தான் விரும்புவார்கள். இன்னும் சொல்லப் போனால், Operation Sindoor போரில், பாரதத்தில் உற்பத்தியாகி, பாகிஸ்தான் நாடு வரைக்கும் பாய்ந்து செல்லும் சிந்து நதி ஓட்டத்தை நிறுத்தினால் பாகிஸ்தான் ராணுவம் அடங்கும் என்று பாரதத்தின் அரசாங்கம் மட்டுமல்ல…, இங்குள்ள ஒட்டுமொத்த மக்களின் குரலும் அதுவாகத்தான் இருந்தது… போர் என்று வந்து விட்டால்…, முதலில் பாதுகாப்பாய், அதைத் தொடர்ந்து எச்சரிக்கை…, முடிவில் முற்றிலும் எதிரியை அழித்து போரை நிறுத்துவது என்பது இரு நாடுகளுக்கிடையில் சகஜமான ஒன்று… இதில் கிருஷ்ணர் மட்டும், அர்ஜுனனை போர் புரிய வேண்டாம் என்று அறிவுறுத்துவாரா… விட்டுக் கொடுத்துச் செல்ல முடிவு செய்தால், எல்லையில் இருக்கும் அவரவர் பகுதிகளையும், நம் திறமையையும் இழக்கத்தான் வேண்டும்… இதனால் அரசாங்கத்துக்கு மட்டும் பிரச்னையில்லை…, எல்லையில் வாழும் மக்களுக்கும் பிரச்னைதானே. எந்த அரசாங்கத்தின் கீழ் நாம் இருக்கிறோம் என்றே தெரியாமல் இருக்கலாமா… அது முறையாகுமா…
மேகலா : Oh! இதில் இவ்வளவு details இருக்கா கிருஷ்ணா… வேண்டுமென்றே, கீதையை கொலை நூல் என்று சொல்பவர்களும் கூட ‘போர்’ முறைகளைப் பற்றி தெரிந்துதானே இருக்கிறாங்க. பின்னே எதற்காக, கொலை நூல்னு சொல்றாங்க… இருந்தாலும், ஸ்ரீகிருஷ்ணர் போர் புரியும் தைரியத்தை, அர்ஜுனனுக்கு புகட்டும் போது, கர்ம யோகம், தியான யோகம், பக்தி யோகம், சந்யாச யோகம்…, என்று கர்மத்தின் பல்வேறு நிலைப்பாடுகளை சொல்லி தைரியத்தை வரவழைப்பது…, அற்புதம் கிருஷ்ணா…
கிருஷ்ணர் : அதையும், இன்று நடைபெறும் யுத்தத்தின் தன்மை வைத்தே உனக்கு சொல்லுகிறேன். பெகல்காமில், தீவிர வாதத் தாக்குதல் நடந்ததும், சுமார் ஒரு வார காலம், ராணுவம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்று அறிவிக்காமலேயே மௌனமாக இருந்து ரகசியமாக திட்டமிடுகிறார்கள். அது ஒரு தியானம் மாதிரி… அடுத்த தன் இலக்கை நிர்ணயிக்கிறார்கள்… தீவிரவாதக் கூடாரம் மட்டுமே தகர்க்கப்பட வேண்டும் என்று இலக்கை குறி வைக்கிறார்கள். கர்ம யோகம் முழுமையாக கடைப்பிடிக்கப்படுகிறது… தகர்த்தெறியப்பட்டவுடன், அவர்களுக்கு எத்தனை சேதாரம் என்று யோசிக்கவேயில்லை… அது சந்யாச நிலை.. போரின் தன்மை இப்படி இருக்கும் போது, கர்மபலனைப் பற்றி நாம் எதிர்பார்க்க வேண்டியதில்லை. ஆனால், ராணுவத்தின் இலக்கு, ட்ரோனின் பங்கு, அதை எதிரி ராணுவம், receive பண்ண முடியாத நேரத்துக்குள் தாக்குதல் என்று…, இதெல்லாம் கச்சிதமாக முடிந்ததா… இதைத்தான் அர்ஜுனனுக்கு எடுத்துரைத்தேன். வேதமாகச் சொன்னால், அது கொலை நூல். போர் என்று வந்தால், அது சாணக்கியத்தனம். உலகம் அப்படித்தான் சொல்லும். நம்புபவர்கள் நம்பட்டும்… போற்றுபவர் போற்றலும், தூற்றுபவர் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே..
மேகலா : யாரோ பேசுவாங்க… நீ ஏன் கண்ணா தூற்றுதலை ஏற்றுக் கொள்ளணும்…
கிருஷ்ணர் : மட்டம் தட்டுபவர்களை ஏற்றுக் கொள்ள முடியாது…, என்று பேசிப் பேசித்தான், மதம் வாரியாக மனிதன் பிரிந்து நிற்கிறான்… அடுத்து என்ன நடக்கிறது…? சனாதன தர்மத்தில் சொல்லப்பட்ட தர்மங்கள், மறந்து போகப்படுகிறது… ‘பக்தி’ என்பது, என் கடவுள் பெரிசா…, உன் கடவுள் பெரிசா…, என்ற தர்க்க வாதத்தில் சிக்கி, பக்தி மழுங்கிப் போய், தீவிரவாதம் தலை தூக்குகிறது… கண்ணன் தூற்றுதலை ஏற்றுக் கொள்ளுவதால், என்ன குறையப் போகிறது… சின்னச் சின்ன கதைகள் மூலம், தர்மத்தை எப்படியாவது மனிதனிடம் புகுத்தி விட வேண்டும் என்று நினைத்துத்தான்…, கடவுள் கூட நாடகம் நடத்த வேண்டியிருக்கிறது… நீ கோபத்தை விடு… கதை சொல்வதை நிறுத்தாதே.. அது தர்மத்தை மனிதர்களிடம் சேர்த்து விடும்… Don’t worry…
மேகலா : அடுத்து என்ன கதை சொல்ல, கிருஷ்ணா…
கிருஷ்ணர் : பங்குனி உத்திரம் வர இருக்கிறது… ஆண்டாள் ரங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கப் போகிறது… நான் கலந்து கொள்ளப் போகிறேன்… கதை கேட்க நேரமில்லை… இன்னொரு முறை வருகிறேன்…. Bye…
மேகலா : கிருஷ்ணா…, கிருஷ்ணா….
(நிறைவு பெற்றது)
Comments
Post a Comment