திருக்குறளில் வாழ்வியல் - பாகம் 6
மேகலா : இன்னும் ஒரு குறள் சொல்லியிருக்கிறார் கிருஷ்ணா…. இப்படிப்பட்ட முயற்சி உடையவர்கள்;
‘இன்பம் விழையான், வினை விழைவான், தன் கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்’
இந்தக் குறள், நம் விஞ்ஞானிகள் அனைவருக்கும் பொருந்தும் கிருஷ்ணா. ஒரு லட்சியத்தை அடையும் வரைக்கும், அதில் கண்ணும் கருத்துமாக இருந்தால்தான், நம்மால் அந்த இலக்கை அடைய முடியும். லட்சியத்தில் ஈடுபட்டிருக்கும் பொழுது, சந்தோஷமாக இருக்க ஆசைப்பட மாட்டார்கள்; தன்னுடைய வேலையில் மட்டுமே குறியாக இருப்பார்கள். இவர்கள், பல சாதனங்களை கண்டுபிடித்து, இந்த உலகத்தின் துன்பத்தைத் துடைத்து, நல்ல பலனைத் தருவார்கள்… பலர் சந்தோஷமாக இருக்க இவர்கள் கஷ்டப்பட்டு வேலை பார்க்கிறார்கள் என்று…, ஒரு மனிதன் எப்படி முயற்சி செய்து வேலையை முடிக்க வேண்டும் என்று வள்ளுவர் அற்புதமாகச் சொல்லியிருக்கிறார் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : உலகத்தில் நடக்கும் சம்பவங்களுக்கும், ஆக்கப்பூர்வமான சாதனைகளுக்கும், மனிதனுடைய முயற்சி மட்டுமே பிரதான காரணம்… இதற்குப் பிறகுதான் தெய்வமும் மற்ற எல்லாரும்… நல்லா யோசிச்சுப் பாரு… இயற்கையை தனக்கு சாதகமாக மாற்றும் முயற்சியில் ஆதி மனிதன் இறங்காவிட்டால்…, ‘சக்கரம்’ பிறந்திருக்குமா… காலத்தின் ஓட்டத்திற்கு சற்றும் இளைக்காமல் மனிதன் வேகமெடுத்திருப்பானா. எந்த அபாயத்தையும், ஆக்கபூர்வமாக மாற்றும் மனிதனின் அற்புதமான சக்திதான் நெருப்பு… விஞ்ஞான அறிவுடன், சோர்வடையாத முயற்சியும் தான் மனிதனை நாகரிகமானவனாக ஆக்கியது… சரி.., வள்ளுவர், ‘நாகரிகம்’ என்று எதைக் குறிப்பிடுகிறார்….
மேகலா : கிருஷ்ணா…, ‘நாகரிகம்’ என்று தனியாக ஒரு அதிகாரத்தில் சொல்லாவிட்டாலும்…, ‘பயனில சொல்லாமை’, ‘இனியவை கூறல்’, ‘வெகுளாமை’…, இன்னும் பலப்பல குணங்களை நாகரிகமாக சொல்கிறார்…. அதிலும், ‘ஒழுக்கம்’ ஒரு மனிதனுக்கு எவ்வளவு மேன்மையைக் கொடுக்கும் என்று சிலாகித்துச் சொல்கிறார் கிருஷ்ணா….
‘ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை; இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி’
இந்தக் குறளில், ஒழுக்கமுடையவர் தான் மேன்மை அடைவர்… ஒழுக்கம் தவறுபவர், எல்லோராலும் அவமானப்படுவர் என்று சொல்லி விட்டு, ஒழுக்கம் உடையவர்களுக்கு மறந்தும் கூட, கெட்ட வார்த்தை பேச வராது…, என்று ஒழுக்கம் தான் சிறந்த பண்புகளின் அடையாளம் என்கிறார் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : எங்கே…, அந்தக் குறளைச் சொல்லு…
மேகலா : இதோ கிருஷ்ணா…
‘ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயால் சொலல்’
வாயால கூட கெட்ட வார்த்தை பேச மாட்டாங்க கிருஷ்ணா… அத்தைனைக்கு நாகரிகமானவங்க கிருஷ்ணா…
கிருஷ்ணர் : வாவ்! சூப்பர்…. கல்வியில் சிறந்தவன்…, சொலல்வல்லன்… ஒழுக்கமுடையவன்… Oh! Great… இப்படி ஒரு மனிதன் இருந்தால், அவன் வாழ்வியலை முற்றும் அறிந்தவன் ஆகிறான்…
மேகலா : ஆமாம் கிருஷ்ணா…
கிருஷ்ணர் : சரி…, உன்னிடம் ஒரு கேள்வி…. ‘வாழ்வியல் என்றால் என்ன…?
(தொடரும்)
(அடுத்த பாகத்துடன் நிறைவு பெறும்)
Comments
Post a Comment